இந்தக் கட்டுரை உங்களை வியப்பில் ஆழ்த்தினால்


மனதிற்கும், அறிவிற்கும்- பல்வேறுமத அரசியல் கோட்பாடுகள் அடிப்படையில், பேரளவுபுனைவு (மகத்துவம்) படிப்பிக்கிற போக்கால், தேவைக்கானவைகளைக் கற்க மறுதளிக்கப்படுவதும், தேவையில்லாதவைகளை வலிந்து படிப்பிப்பதும், மன உளைச்சலுக்கான அடிப்படை என்கிற நிலையில்- எளிமையாக உருவாக்கிக் கொள்ள முடிகிற மனஉறுதியும், எளிமையாக அகற்றிக் கொள்ள முடிகிற மன உளைச்சலும் எட்டக்கனிபோல பீற்றிக்கொள்ளப்படுவது, இந்திய மற்றும் தமிழ்இனத்தின் இற்றை நிலையாகும். அதை அகற்றி மகிழும் வகைமைக்கானது இந்தக் கட்டுரை.

மனம் என்பது மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன். மற்ற ஐந்தறிவு உயிரிகள் பெற்றிருக்கிற, ஐந்து அறிவுகளுக்கான புலன்களையும் மனிதன் கொண்டிருக்கிறான். இதை

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே

மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே

ஆறறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே

என்று தனக்கு முந்தைய தமிழ்முன்னோர் நிறுவியுள்ளதாக தொல்காப்பியர் தெரிவிக்கிறார். மேலும்,

புல்லும் மரனும் ஓரறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

நந்தும் முரளும் ஈரறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

சிதலும் எறும்பும் மூவறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

நண்டும் தும்பியும் நான்கறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

மாவும் மாக்களும் ஐயறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

மக்கள் தாமே ஆறறி வுயிரே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

என்கிற தொல்காப்பிய நூற்பாக்களோடு பொருத்திப் பார்க்கலாம்.

மனிதனின் முதலாவது அறிவுக்கான புலன் மெய். மெய்- தரையில் ஊன்றியிருக்கிற காலிலிருந்து உச்சி வரை அனைத்தும் ஆகும். 

மனிதனின் இரண்டாவது அறிவுக்கான புலன் வாய். வாய்- கழுத்துக்கு மேல், தலையின் தொடக்கத்தில் மெய்யுக்கு அடுத்து இரண்டாவது வெளிவட்டமாக அமைந்தது ஆகும். 

மனிதனின் மூன்றாவது அறிவுக்கான புலன் மூக்கு. மூக்கு- வாய்ப் புலனுக்கு மேல் இரண்டாவது வட்டத்திற்கு வெளியே மூன்றாவது வெளிவட்டத்தில் அமைகிறது.

மனிதனின் நான்காவது அறிவுக்கான புலன் கண். கண்- மூக்கு புலனுக்கு மேல் மூன்றாவது வட்டத்திற்கு வெளியே நான்காவது வெளிவட்டத்தில் அமைகிறது.

மனிதனின் ஐந்தாவது அறிவுக்கான புலன் செவி. செவி- கண் புலனுக்கு மேல் நான்காவது வட்டத்திற்கு வெளியே ஐந்தாவது வெளிவட்டத்தில் அமைகிறது.

மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன் மனம். மனம்- செவிப் புலனுக்கு மேல் ஐந்தாவது வட்டத்திற்கு வெளியே ஆறாவது வெளிவட்டத்தில் அமைகிறது.

மனம் மனிதனின் பின்தலையில் அமைந்து, உடலின் அனைத்து உறுப்புகளின் அறிதலோடு தொடர்பில் அமைகிறது.

தமிழ்முன்னோர் நிறுவியுள்ள முதலெனப்படுவது இடமும் காலமும் என்பதில்- இடம் என்பது விசும்பு என்கிற திரம், அது கடவுள் என்றும் பேசப்படுகிறது. காலம் என்பது அடிப்படையில் தனிஒன்றுகள், வழிநிலையில் நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறை, அது இறை என்றும் பேசப்படுகிறது. 

இதன் அடுத்த கிளை நிலைதாம் ஆறறிவு மனிதன் வரையிலான உயிரிகள் அல்லவா? இவற்றில் ஐம்புலன்கள்- இறையின் அல்லது நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகளின் விரிவே ஆகும். ஆறாவது புலன் ஆன மனம்- கடவுளின் அல்லது விசும்பின் விரிவே ஆகும். 

மெய்: இடத்தை அறிகிறது. இது நான்மறை கொண்டுள்ள மாட்சிகளில் (ஆற்றல்) விசும்பை அறிதல் ஆகும்.

வாய்: ஆறு சுவைகளை அறிகிறது. இது நான்மறை கொண்டுள்ள மாட்சிகளில் (ஆற்றல்) நிலத்தை அறிதல் ஆகும்.

மூக்கு: நீரின் பல்வேறு மணங்களை அறிகிறது. இது நான்மறை கொண்டுள்ள மாட்சிகளில் (ஆற்றல்) நீரை அறிதல் ஆகும்.

கண்: பல்வேறு வடிவங்களை அறிகிறது. இது நான்மறை கொண்டுள்ள மாட்சிகளில் (ஆற்றல்) நெருப்பை அறிதல் ஆகும்.

காது: பல்வேறு ஒசையை, இசையை, மொழியை அறிகிறது. இது நான்மறை கொண்டுள்ள மாட்சிகளில் (ஆற்றல்)  காற்றை அறிதல் ஆகும்.

மனத்திற்கு நேரடியாக அறிகிற மாட்சி (ஆற்றல்) எதுவும் இல்லை. அதனால் இது ஐந்தாவது திரமான விசும்பை அல்லது கடவுளை ஒத்த அறிதலைக் கொண்டுள்ளது. மற்ற ஐம்புலன்களின் அறிவுகள் இந்த மனதில்தாம் பதிவு ஆகிறது. 

அந்த வகையில் தமிழ்முன்னோர் முதலென நிறுவிய இடம் மற்றும் காலத்தில்- விசும்பை, நிலத்தை, நீரை, தீயை காற்றை அறிகின்றவையாக இருக்கின்றன மெய்யும், வாயும், மூக்கும், காதும் என்கிற ஐம்புலன்கள் ஆகிய காலம். 

ஆறாவது புலனான மனமோ இடத்தின் அல்லது கடவுளின் விரிவாகவே அமைகிறது. என்பதைத் தெளிவாகப் பொருத்திப் பார்க்க முடியும். 

நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகளைக் காலமாகவும் விசும்பை இடமாகவும் தமிழ் முன்னோர் நிறுவியுள்ளது போலவே மனிதனின் 

ஆறாவது புலன் ஆன மனம் இடம் என்றும், மற்ற ஐந்து புலன்கள் காலம் என்றும் தமிழ்முன்னோர் கருதியிருந்ததை மனம் குறித்த ஆய்வில் நாம் உணர முடியும்.  

நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு மறைகளுக்குக் கடந்தும் உள்ளும் இருக்கிற ஐந்தாவது திரம்- அல்லது கடவுள்- எப்படி வெளி, விண்வெளி, விசும்பு என்று மூன்று நிலைகளைக் கொண்டுள்ளதோ அதுபோன்றே 

மனிதனின் ஐம்புலன்களின் அறிவை பதிந்து கொள்கிற மனமும் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது.

மனம் ஆறாவது புலனாக மட்டும் அமைவது முதலாவது நிலையாகும். அதில் மற்ற ஐம்புலன்களின் அறிவுகள் பதிவது இரண்டாவது நிலை. அந்தப் பதிவுகளைப் பெற்ற வகைக்கு அந்த புலன்களை இயக்குவதும், அந்தப் பதிவுகளை செயலாகவும், எண்ணமாகவும், தமிழாகவும் (எண்ணமொழி) வெளிப்படுத்துவதும் மனத்தின் மூன்றாவது நிலையாகும்.

இந்த வெளிப்படுத்தலில் இயற்கையின் நடைமுறையால் அறிந்ததை இயல்அறிவு என்றும், எதிர்கால நிகழ்வுகளை கணிக்கிற கலையை இயல்கணக்கு என்றும் நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர்.

இயல் என்பது இயக்கம் என்கிற நடைமுறையும் இயம் என்கிற கோட்பாடும் கொண்டது ஆகும். நடைமுறையும் கோட்பாடும் இயற்கையின் அனைத்தும் கொண்டிருப்பதால் அந்த அனைத்தையும் இயற்கை என்று பேசினர் தமிழ்முன்னோர். ஆக இயற்கை பற்றிய  அறிவு இயல்அறிவு ஆகும். அதில் இயற்கையின் கோட்பாடும் நடைமுறையும் இருக்கும். 

இந்த இயல்அறிவைத்தான் ஐரோப்பியஇயல் சயின்ஸ் என்கிறது. நாம்- நமக்கு சயின்சே இல்லாதது போல், உலகின் முதல் 

அணைக்கட்டான கல்லணையைத் தமிழன் எப்படி கட்டியிருக்க முடியும் என்கிற அறிவுத்தேடலே இல்லாமல், அந்த சயின்சை அறிவாக மலைத்து சயின்சை அறிவியல் என்று பிழையாக மொழிபெயர்த்து புழங்கிக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்முன்னோர் கண்டு நிறுவிய இயல்கணக்கு ஒன்றைவிட ஒன்று மேம்பட்டதாக ஐந்து முன்னேற்றக்கலைகளை கொண்டது ஆகும். அவை முறையே 1.காப்பியம் 2.இலக்கியம் 3.நிமித்தகம் 4.கணியம் 5.மந்திரம் ஆகும்.

எண்பது மதிப்பெண்களுக்கு உரியது காப்பியம் ஆகும். இது தொல்காப்பியம் தொடங்கி, தொல்காப்பியம் குறிப்பிடுகிற ஐந்திரம் உள்ளிட்ட தமிழில் அமைந்த அனைத்து இலக்கண நூல்களும் ஆகும்.

இருபது மதிப்பெண்களுக்கு உரியது இலக்கியம் ஆகும். இது பத்துப்பாட்டு எட்டுத்தொகை என பழந்தமிழர் முன்னெடுத்தது தொடங்கி, நடப்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிற அனைத்து உரைகளும் வரை ஆகும்.

நாற்பது மதிப்பெண்களுக்கு உரிய மூன்றாவது முன்னேற்றக் கலை நிமித்தகம் (சாதகம், சோதிடம்) ஆகும். 

அறுபது மதிப்பெண்களுக்கு உரிய, நிமித்தகத்தின் மேம்படுத்தப்பட்ட நான்காவது முன்னேற்றக்கலை கணியம் ஆகும்.

எண்பது மதிப்பெண்களுக்கு உரிய, கணியத்தின் மேம்படுத்தப்பட்ட ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில் அறிதல் அல்லது கற்றல் நிலை ஆகும். அதே மந்திரத்தின் கற்றல் வழி நிற்றல் நிலைக்கு நூறு மதிப்பெண்கள் அளிக்க முடியும் என்பதை, 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.

என்கிற குறளின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

தமிழ்மக்களின் மனங்களில் பதிந்த ஐந்தறிவுகளின் தொகுப்பே இயல்அறிவு என்று பொது நிலையிலும், தமிழுக்கு மட்டுமான சிறப்பு நிலையில் இயற்றமிழ் என்றும், தமிழ்முன்னோர் நிறுவியது ஆகும். அந்த இயல்அறிவின் கணிப்புகளாகவே அமைந்தன ஐந்து முன்னேற்றக் கலைகளான இயல்கணக்கு.

ஆக தனிமனிதனின் மனம்- அவனின் ஐம்புலன்களில் பட்டறிவாக நடப்பு தற்பரை வரை அறிந்தவைகளையும், மற்ற மனிதர்களோடு அவன் தொடர்பு கொண்டு அவர்களின் பட்டறிவை சொல்லக் கேட்டு அறிந்தவைகளையும், கலையாக கல்வியாக நிறுவனங்களில் இணைந்து படித்த வகையில் அறிந்தவைகளையும் பதிவு செய்து கொண்டுள்ளது.

இந்த அறிவுகளின் மூலம் இயற்கை பொருள்களில் இருந்து உணவு, உடை, இருப்பிடம், பயணம் சார்ந்து இன்றைக்கு கணினி வரையிலான கருவிகளை உருவாக்குவது அவரவர் ஈடுபாடு மற்றும் முனைப்பின்  அளவுக்கு பலருக்கும் பல கோணங்களில் சாத்தியமாகிக் கொண்டே வருகிறது. 

ஆக மனத்தின் ஊக்கம் என்பது ஐம்புலன்களை தாங்கிக் கொண்டுள்ள உடலின் நலத்திலும், தலைவன் தலைவி பிள்ளைகள் என்று அமைகிற குடும்பத்தின் நலத்திலும், அறிவுக்காக அனைவரும் பெறுகிற கல்வி வளத்திலும் இருக்கிறது.

தனிமனிதனுக்கு கிடைக்காத இந்த வகைமைகளுக்கான ஏந்துக்கள் மட்டுமே மனஉளைச்சலுக்கான காரணம் ஆகும். இந்தக் கிடைக்காமையைப் பல்வேறு ஏற்றதாழ்வுகள், சமவாய்ப்பு மறுத்தல், வாய்ப்புகளை மறுப்பதற்கு முன்னெடுக்கும் நுழைவுத்தேர்வுகள், 

பேரினவாத ஆதிக்கங்கள். ஒற்றை மொழி, ஒற்றை மதக் கோட்பாடுகள் திணிப்பு என்பவைகளாக இந்தியச் சட்ட சமூக கட்டமைப்பு பேரளவாகக் கொண்டுள்ளது. இந்தியா விடுதலை பெற்ற கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக ஒற்றையின அதிகார ஆளுமை- கிடைக்காமைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

மனத்திற்கும் அறிவுக்கும் மகத்துவம் கற்பித்து, அந்த வகையால் உருவாக்கப்பட்ட மனஉளைச்சலைப் போக்குவதாக, அதே ஆளுமைகள்- மக்களிடம் மூடநம்பிக்கை, கற்பனை புனைவுத் தொன்மங்களைக் கருத்துப்பரப்புதல் செய்து வேறு வகையாக உழைப்பைச் சுரண்டி  வருகிறது. 

கல்வி, திருமணம், தொழில், வணிகம், தனித்திறன் ஊக்குவிப்பு ஆகியவற்றில் பிள்ளைகளுக்கு உறுதியளிக்கிற- வகைபாட்டுக் கோட்பாடு அடிப்படையில்- பத்தாயிரத்திற்கு மேலான ஆண்டுகள் பழமை கொண்ட தமிழ்ச் சமூகத்தின் குடும்ப அமைப்பு இயங்கி வருவதால்- தமிழ்க்குடும்பம் தனிமனிதனுக்குக் கிடைக்காமையைக் கட்டுப்படுத்தி மனஉளைச்சலைக் குறைப்பதில் பெரும்பங்காற்றி வருகிறது. 

மனம் அறிவை பதித்துக் கொள்வதற்கான புலன். ஈடுபட்டிருக்கிற துறைக்கு தேவையான முழுமையான அறிவைப் பதித்துக்கொள்வதைப் பொறுத்தும் மற்ற ஐம்பலன்களைத் தாங்கியிருக்கிற உடல்நலனைப் பொறுத்தும் மனம் நிறைவு அடைகிறது. மகிழ்ச்சி அடைகிறது. 

மனதை தனியாக வளப்படுத்துவதற்கு எந்தத் தேவையும் இல்லை. கிடைக்காமைகளை கொடுத்தால், கிடைத்திட்ட மனம் பேரளவாக மகிழவே செய்யும்.

உடல் நலன் பேணுவதும், அறிவை பேரளவாகப்பெறுவதும் மிகமிக எளிமையானதும் எல்லோராலும் பெற முடிந்ததும் ஆகும். அதை 

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

என்ற குறளில்- இந்தியாவின் சட்ட சமூக அமைப்பு முன்னெடுக்கிற நுழைவுத்தேர்வு, நீட் என்பனவெல்லாம் ஏமாற்று என்றும், அறிவைப் பெறுவது மிக மிக எளிது என்றும் தெரிவிப்பதற்கு, சின்னக் குழந்தையின் பிஞ்சு விரல்களாலும் தோண்ட முடிகிற மணற்கேணியை அறிவுத் தேடலுக்கு உவமை ஆக்கியுள்ளார் திருவள்ளுவப் பெருந்தகை.

இது என்மந்திரம் நூலில் பதினான்காவதாக அமைந்த, மனம் குறித்த கட்டுரை.  இந்தக் கட்டுரை உங்களை வியப்பில் ஆழ்த்தினால், மந்திரம் நூலில் அமைந்த ஐம்பத்தியாறு கட்டுரைகளும் பேரளவான வியப்பில் ஆழ்த்தவே செய்யும்.

மந்திரம் நூலை வாங்க இந்த இணைப்பு உங்களுக்கு உதவும்.

மந்திரம் கலைவளவன் மாண்பிதழ் படிப்பிற்கு இந்த இணைப்பு உதவும்.


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பு!

கலைவளவன் (VALAVAN OF ARTS) என்கிற தலைப்பிற்கான ஓராண்டு படிப்பு

சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம்